ஞாயிறு, 21 ஜூலை, 2013

குடிஞ்சலும் அப்பாவும்....


தோட்டத்தில் உருளை கிழங்கு பயிரிட்டிருந்த சமயம், அப்போதெல்லாம் இரவு நேரங்களில் அப்பா காவலுக்கு செல்வது வழக்கம். காரணம் காட்டு பன்றிகள் தோட்டத்திற்குள் நுழைந்து அட்டகாசம் செய்து விட்டு போய்விடும். பன்றிகளை கொடிய விலங்கு என்று நான் நம்பிக்கொண்டிருந்த காலக் கட்டம் அது. அப்பா காவல் இருக்கும் இடத்திற்கு பெயர் "குடிஞ்சல்".
 
நான்கு குச்சிகளை கொண்டும் ஒரு தார்ப்பாயை கொண்டும் அது வடிவமைக்கப்பட்டிருக்கும். உள்ளே ஒரு மூலையில் எப்போதும் பாதி மண்ணெண்ணெய் குடித்த நிலையில் ஒரு விளக்கும், அப்பாவின் வாசனையை சொல்லும் ஒரு பாயும் இரண்டு கம்பளிகளும் ஒரு ஓரத்தில் சுருட்டி வைக்கப் பட்டிருக்கும். பள்ளி இல்லாத நாட்களில் பகல் நாட்களில் நானும் அக்காவும் அங்கு தான் தங்க வைக்கப் பட்டிருக்கிறோம்.
 
குடிஞ்சலுக்கு முன்னாள் எப்போதும் எரிந்து போன நிலையில் ஒரு மரக் கட்டையும், அவ்வபோது தேனீர் வைத்து குடிக்க மூன்று செங்கல் கற்களை கொண்ட அடுப்பும் சாம்பலை கக்கிய படி வாசலில் கிடக்கும். இரவு நேரங்களில் அப்பா இங்கே வந்து என்ன செய்வார் என்று எனக்கு நானே கேட்டு கொள்வேன், இரவு நேரங்களில் பன்றியை விரட்ட அப்பா போடும் சத்தம் பன்றிகளை தாண்டி வீட்டில் இருக்கும் எங்களுக்கும் கேட்கும். அப்பாவின் சத்தத்தை கேட்டு பயந்திருக்கிறேன், சிரித்திருக்கிறேன், அந்த நேரங்களில் எல்லாம் அம்மாவை எழுப்பி என்னை குடிஞ்சலுக்கு கூட்டி போக சொல்லி அழுதிருக்கிறேன், நான் ஜெபம் செய்ய பழகியது கூட அப்பாவுக்காகவும் அந்த குடிஞ்சலுக்காகவும் தான்.
 
எவ்வளவு அடம் பிடித்து அழுதாலும் இரவு நேரங்களில் குடிஞ்சலுக்கு அழைத்துக் கொண்டு போகவே மாட்டார். ஒரு நாள் பிடிவாதம் அதிகமாக "வந்து தொலை" என்று திட்டித் தான் அழைத்துப் போனார். நான் திருவிழாவிற்கு போவதை போலத் தான் அவரோடு போனேன். குடிஞ்சலை அடைந்ததும் முதலில் விளக்கு ஏற்றப்பட்டது. பாய் விரித்த அப்பா என்னை படுக்க சொல்லிவிட்டு, அங்கே கிடந்த மரக் கட்டையை எரியுட்டினார். ஹோ ஹோய் ஹோ ஹோய் எனக் கத்திக் கொண்டே இருந்தார். "ஏம்பா பண்ணி தான் வரலையே ஏன் சும்மா கத்திக்கிட்டே இருக்க"னு புரியாமல் கேட்டது இன்னும் நினைவில் இருக்கிறது. "டேய் இந்த சத்தம் பன்னிக்கு இல்ல, எலிக்கு என்றார். (காரணம் எலி உருளை கிழங்குகளை கடிச்சி கடிச்சி வச்சிட்டு போய்டும்.) எலியை பிறகு எங்கு பார்த்தாலும் அடிக்க பாய்வதற்கு இதுவும் ஒரு காரணம்.)
 
மொத்த சத்தங்களையும் இரவு வாங்கி வைத்துக் கொண்டு அமைதியாய் இருக்க, அப்பா மட்டும் காத்துக் கொண்டும் அவ்வபோது கத்திக் கொண்டும் இருந்தார். அப்பாவிடம் ஏதேதோ கேட்க முயன்று தோற்று போன நாட்களில் அந்த இரவும் ஒன்று. அந்த நேரம், எனக்கு அப்பாவை பார்க்கும் போது சந்தோசமாக இருந்தது, அப்பா என்ன பார்க்கும் போது பாவமாக இருந்தது. ஒரு கட்டத்தில் அப்பா கத்துவது போல நானும் கத்தி கொண்டிருந்தேன், அப்போது அப்பா என்னை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்.
 
எப்போது அந்த தருணத்தை நினைத்தாலும் நான் மட்டும் அழுது கொண்டே இருப்பேன். காரணம் அதன் பிறகு இது வரை அவர் அந்த சிரிப்பை எனக்கு தந்ததில்லை. அப்பாவிடம் அதை நினைவு படுத்தும் போதெல்லாம் பொய்யாக ஒரு சிரிப்பாய் உதிர்ந்துவிட்டு போய்விடுவார். அந்த சிரிப்பை மீட்டு தர இப்போது அந்த குடிஞ்சலும் இல்லை, அந்த பன்றிகளும் இல்லை....

என் ஹீரோவுக்காக....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக